WELCOME to TNPSC++

Wednesday, January 26, 2022

TNPSC Group 4 preparation tips:


 TNPSC Group 4 - Preparation tips: முறையாகத் திட்டமிட்டுப் படித்தால், முதல் முறையிலேயே உள்ளங்கையில் அரசுப் பணிக்கான உத்தரவைப் பெறலாம்


தொடர்ந்து ஒருவர் படித்துக்கொண்டே இருக்கும்போது, ஒருகட்டத்தில் நிச்சயம் சலிப்பு தட்டும். உறக்கம் வரும். அப்போது நமக்குப் பிடித்த பாடத்தை எடுத்துப் படிக்கவேண்டும்.

அருணுக்கு 29 வயது. பட்டப்படிப்பை முதல் வகுப்பில் முடித்துவிட்டு வளாகத் தேர்வில் தேர்ச்சி பெற்று பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கை நிறைய சம்பளத்துடன் வேலை பார்க்கிறார். ஆரம்பத்தில் இருந்தே அரசுப் பணி மீது அருணுக்கு ஆர்வம் இருந்தாலும், அதை முயற்சித்துப் பார்ப்பதில் ஏனோ தயக்கம் அவருக்கு.

அரசுப்பணி என்றாலே எல்லோரும் தயங்குவதற்குக் காரணம் அசாத்தியப் பொறுமையும், அபார உழைப்பும், காத்திருப்பும் தேவைப்படும் என்பதுதான். ஆனால் முதல் முறை தேர்விலேயே வெற்றி பெற்றுப் பணியில் சேர்வதும் சாத்தியம்தான். நம் முன்னாலேயே இதற்கான முன்னுதாரணர்கள் ஏராளமாய் இருக்கின்றனர்.

ஒருவர் முதல்முறையாகப் படித்துத் தேர்வெழுதும்போது, பெரும்பாலும் தேவையான மதிப்பெண்களைப் பெறுவதைக் கடினமாக உணர்ந்திருக்கலாம். இரண்டாவது முறை எழுதும்போது மதிப்பெண்கள் கிடைத்தாலும், நூலிழையில் பலர் வேலையைத் தவறவிட்டிருக்கலாம். 3வது முறை முயற்சித்தால் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள் போட்டித் தேர்வுப் பயிற்சியாளர்கள். எனினும் ஒருவர் முறையாகத் திட்டமிட்டுப் படித்தால், முதல் முறையிலேயே உள்ளங்கையில் அரசுப் பணிக்கான உத்தரவைப் பெறலாம்.

ஒரு தேர்வுக்கு 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தால், அவை அனைத்தும் நமக்கானவை என யாரும் நினைக்கக்கூடாது. அதில் பொது, பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி, தமிழ்வழி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் என பல்வேறு ஒதுக்கீடுகள் இருக்கும் என்பதால் நமக்கான போட்டியிடங்கள் சில நூறு மட்டுமே என நினைத்துப் படிக்க வேண்டும். அதற்காக கடின உழைப்பைக் கொடுக்க வேண்டும். இதை முன்கூட்டியே புரிந்துகொள்ள வேண்டும்.

''பொதுவாக குரூப் 4 தேர்வைப் பொறுத்தவரை 6 முதல் 10-ம் வகுப்பு வரையான பாடப்புத்தகங்களைப் படித்தாலே போதுமானது. எனினும் 12-ம் வகுப்பு வரையிலான புத்தகங்களைப் படித்தால், தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எளிதில் பதிலளிக்கலாம். அரசியலமைப்பு (இந்திய ஆட்சியியல் ) பாடத்துக்கு மட்டும் தனி கையேடு அல்லது பட்டப்படிப்பு தரத்திலான புத்தகங்களைப் படிக்க வேண்டியது தேர்வை எதிர்கொள்ள உதவும்'' என்கிறார் போட்டித் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்று அரசு ஊழியராகப் பணியாற்றி வரும் நாகராஜன்.

குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ், பொது அறிவு ஆகிய இரண்டு பகுதிகளிலும் தலா 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகளுக்குத் தேர்வு எழுத வேண்டும். 1 கேள்விக்கு 1.5 மதிப்பெண்கள் என்ற வகையில், மொத்தம் 300 மதிப்பெண்கள் கிடைக்கும். இதில் குறைந்தபட்சத் தேர்ச்சியாக 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எப்படிப் படிக்க வேண்டும்?

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் ஒருவர் தினந்தோறும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அதைவிடவும் கூடுதல் நேரம் செலவிட்டால்... அதாவது முதலீடு செய்தால், அவர்களின் வெற்றி வாய்ப்பு அதிகமாகும்.

முதலில் 6-ம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும். பாடங்களை வரிகள் விடாமல், புரிந்து படிக்க வேண்டும். அடிப்படையை சரியாகப் புரிந்துகொண்டால்தான், அதன் நீட்சியாக அடுத்தடுத்த வகுப்புகளில் உள்ள மேம்படுத்தப்பட்ட பாடங்களைத் தெளிவாகப் படிக்க முடியும். அதேபோல புத்தகத்துக்குப் பின்னால் உள்ள பாடங்களையும், பயிற்சிகளையும் படிக்க வேண்டும்.

தூக்கம் வரும்போது...

தொடர்ந்து ஒருவர் படித்துக்கொண்டே இருக்கும்போது, ஒருகட்டத்தில் நிச்சயம் சலிப்பு தட்டும். உறக்கம் வரும். அப்போது நமக்குப் பிடித்த பாடத்தை எடுத்துப் படிக்க வேண்டும். செய்தித்தாள் வாசிக்கலாம். திறனறிவு (APTITUDE) கொண்ட கணக்குகளைப் போட்டுப் பார்க்கலாம். அப்போது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். இவற்றின் மூலம் உறக்கத்தையும் சோர்வையும் தவிர்க்கலாம்.

ஒரு பாடத்தை எடுத்துக்கொண்டால், அந்தப் பாடத்தை முழுமையாக முடித்துவிட்டு அடுத்த பகுதிக்குச் செல்லலாம் (சோர்வு ஏற்படும் நேரத்தில் மாற்றிப் படிப்பது தாண்டி). அல்லது அடிப்படையில் (6-ம் வகுப்பில்) இருந்து ஒரு பாடத்தைப் படித்தால், அதே தரத்தில் உள்ள பிற பாடங்களைப் படிக்கலாம். இதனால் தேவையற்ற குழப்பம், மறதி ஏற்படாது.

எதைப் படிக்க வேண்டும்?

அதேபோல முதலில் எதைப் படிக்க வேண்டும் என்பதிலும் தெளிவு வேண்டும். ஒவ்வொருவரும் குறிப்பிட்ட பாடத்தில் ஆர்வமாகவும் புலமையுடனும் இருப்பர். அதேபோலப் பிடிக்காத பாடமும் இருக்கும். எந்தப் பாடத்தில் நாம் வலிமை குறைந்தவர்களாக இருக்கிறோமோ அந்தப் பாடத்தை முதலில் படித்து முடிக்க வேண்டும்.

பொது அறிவு (General Studies)பகுதி பரந்துபட்ட ஒன்று. இதில், பொது அறிவியல் (GENERAL SCIENCE), நடப்பு நிகழ்வுகள் (CURRENT EVENTS), புவியியல் (GEOGRAPHY), வரலாறு (HISTORY), இந்திய ஆட்சியியல் (INDIAN POLITY), பொருளாதாரம் (INDIAN ECONOMY), இந்திய தேசிய இயக்கம் (INDIAN NATIONAL MOVEMENT), தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் (HISTORY, CULTURE, HERITAGE AND SOCIO-POLITICAL MOVEMENTS OF TAMILNADU ), தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் (DEVELOPMENT ADMINISTRATION IN TAMILNADU) ஆகிய 9 பகுதிகள் உள்ளன.

இந்த 9 பகுதிகளில் இருந்து மொத்தம் 75 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும். திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு (APTITUDE & MENTAL ABILITY TESTS) பகுதியில் இருந்து 25 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் இருக்கும். இவை அனைத்தையும் படித்தால்தான் 100 மதிப்பெண்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ள முடியும்.

ஆனால் பொதுத் தமிழ் (General Tamil) அப்படியல்ல. தமிழை மட்டும் முழுமையாகப் படித்தாலே 100 கேள்விகளில் 95 கேள்விகளுக்காகவது சரியாக பதிலளிக்க முடியும். 

No comments:

Post a Comment